Saturday, March 28, 2020

சில்லுக்கருப்பட்டி (2019)



சில்லுக் கருப்பட்டி - இயக்குனர் ஹலீதா ஷமீம் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஏந்தலாஜி வகை திரைப்படம்.

இயக்குனர் ஹலீதா ஷமீம் அவர்களுக்கு இது இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படம் பூவரசம் பீபீ.இதற்கு முன்பு அவர் குறும்படம் ஒன்றும் எடுத்துள்ளார். பிரேக்கப் - Break Up - Many a times you breakdown என்ற குறும்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் பார்த்திருக்கிறேன்.




இந்த குறும்படத்தில் ஒரு சிறு வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது.சாதாரணமாக காதல் மற்றும் காதல் தோல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் குறும்படங்களுக்கும், பாடல்களுக்கும் மத்தியில் கவிதையாக சொல்லப்பட்டு காட்சிப்படுத்திய விதம் மாறுபட்டு இருந்தது. அது அழகுடனும்சொல்லப்பட்டு இருந்தது.பின்னர் இந்த குறும்படத்தின் இயக்குனர் ஒரு பெண் என தெரிய வந்தது. இந்த குறும்படம் எனக்கு பிடித்து இருந்தது.

இதுவே சில்லுக்கருப்பட்டி திரைப்படம் பார்க்க என்னை தூண்டியது. எனக்கு அதன் டீசர் & டிரைலர் மிகவும் பிடித்திருந்தது.

முன்பே சொன்னதுபோல் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் ஏந்தலாஜி வகை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி சில்லுக்கருப்பட்டி நான்கு பருவத்தில் வருகின்ற காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நான்கு குறும்படங்களை கொண்டு இருக்கின்றது.

*SPOILER ALERT*

இந்த திரைப்படத்தில் நான்குகுறும்படங்கள் இருந்தது அல்லவா முதல் குறும்படம் பிங்பேக்.

கதை அளவில் ஒரு குப்பை பொறுக்கும் அடித்தட்டு வர்க்க பையனுக்கும் நன்கு வசதியான ஒரு பதின்ம வயது பெண்ணுக்கும் இடையே நடக்கின்ற உணர்வு பரிமாற்றமே இந்த பிங்பேக்.
சென்னை குப்பத்தில் வாழும் மாஞ்சா என்ற 12 முதல் 15 வயதுடைய சிறுவன், குப்பை கிடங்கில் குப்பைகளுக்கு நடுவில் உபயோகப்படும் பொருட்களை பொறுக்குவதை வழக்கமாக கொண்டு இருக்கின்றான். ஒரு நாள் குப்பை கிடங்கில் பிங்க் நிற குப்பை பை ஒன்றில் இருந்து எடுக்கும் சுமார் பதிமூன்று அல்லது பதினைந்து வயது பெண்ணின் புகைப்படத்தின் மீது ஆர்வம் கொள்கிறான். பின்பு தினமும் அந்த பிங்க் நிற பையிலிருந்து வரும் குப்பையில் இருந்து அந்தப் பெண்ணின் சில பொருட்களை அவன் சேகரித்து வைத்துக் கொள்கிறான்.இப்படி அவளிடம் இருந்து தொலைந்து போகும் மிக முக்கியமான விலையுர்ந்த பொருள் ஒன்று அந்த குப்பைத்கிடங்கு வழியாக அவன் கைக்கு கிடைக்கின்றது. அதை வைதுக் கொண்டானா அல்லது அவளிடம் கொண்டு சேர்த்தானா இல்லை அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முதல் குறும்படத்தின் கதை.

கதையாக கேட்கும்போது ஒரு அழகியல் தன்மையுடன் இருக்கும் இந்த கதை முழுமையாக திரை மொழியாக்கம் செய்யப்பட்டதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மிகவும் நம்பகத்தன்மையற்ற ஒரு திரைக்கதை கட்டமைப்பும், நம்பகத் தன்மையற்ற நடிப்பும் இந்த குறும்படத்தின் குறைகளாக உள்ளது.

Non actors - ஐக்கொண்டு நடிக்க வைக்கும் பொழுது அவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதே முக்கியம், ஆனால் இந்தக் குறும்படத்தில் அவர்களின் நடிப்பு சுமாராக இருப்பதற்கு காரணம் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வைக்கப்பட்ட வசனங்கள் போன்று அவர்கள் உச்சரிப்பதே.

நான் முன்பே சொன்னது போல் கதாபாத்திர வடிவமைப்பும், திரைக்கதையின் நம்பகத்தன்மையையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் இது ஒரு நல்ல குறும்படம் போலவே உங்களுக்குத் தோன்றும்.

இயக்குனர், சேரி வாழ் மக்கள் மற்றும் அங்கு உள்ள சிறுவர்களை பற்றி அனுபவமில்லாத அதே சமயம் கேள்விப்பட்ட கதைகளையும் அவருக்கு தெரிந்த, அவரால் புரிந்து கொள்ளப்பட்ட சிறுவர்களைப் பற்றி எடுத்தது தான் இந்த குறும்படத்தின் பிரதான பிரச்சினையாக நான் எண்ணுகிறேன்.


அடுத்த இரண்டு குறும்படங்கள் காக்கா கடி மற்றும் Turtles முறையே இவை காக்கா கடி 25-30 வயது இளைஞர்கள் பற்றிய கதை மற்றும் Turtles முதியோர்களுக்கு இடையே நடக்கும் கதை.

இந்த இரண்டு குறும்படங்களையும் மேலே சொன்ன பிங்க் பேக் போன்று நடிப்பில் பிரச்சினை இருப்பதில்லை.

இளைஞர்களைப் பற்றிய காதலை சொல்வதற்கு இயக்குனர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் மிகவும் சுவாரசியமான தாகவே இருந்தது.ஒரு ஆடை வடிவமைப்பாளராணா பெண் மற்றும் ஐடி ஊழியராக இருந்து கொண்டு மீம்ஸ் கிரியேட் செய்யும் ஒரு facebook பக்கத்தின் அட்மினாக இருக்கும் ஒரு இருக்கும் ஒரு இளைஞர்.

முதல் குறும்படம் போல் இல்லாமல் இந்த குறும்படத்தில் கையாளப்பட்ட கதைக்களமும் கதை மாந்தர்களும் இயக்குனருக்கு அறியப்பட்ட கதை மாந்தர்கள் மற்றும் கதைக்களம் என்பதுபோல் தெரிகிறது.

காக்கா கடி குறும்படத்தில் திரைக்கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டே இருந்தாலும் இதில் வரும் சம்பவங்களின் நம்பகத்தன்மை மிகவும் குறைவாகவே உள்ளது.உதாரணமாக ஒரே cab-இல் தினமும் எதேச்சையையாக தொடர்ந்து அவர்கள் பயணம் செய்வது, ஒரு ஐடி ஊழியர் கேன்சரால் பாதிக்கப்பட்ட பின் குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் ஆப்பரேஷன் செய்துகொள்வதும், அதை மருத்துவமனை அனுமதிப்பதும் நம்பும்படியாக இல்லை. அதே போல் ஒரு கேன்சர் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் அதை அவ்வளவு சுலபமாக கடந்து விட முடியும் என்பது போல் காட்டியிருப்பது நடைமுறைக்கு மிகவும் தொலைவில் இருக்கும் ஒரு விஷயமாகவேதோன்றியது.

இந்த சம்பவங்கள் இப்படி நடக்கவே நடக்காது என்பது அல்ல பிரச்சனை அதை நம்பும்படியாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் (suspension of disbelief)தான் ஒரு நல்ல இயக்குனரோ எழுத்தாளர்களுடைய வேலையாக நான் நினைக்கிறேன்.

மேற்க்கூறியவற்றை விட மிகவும் நம்பகத்தன்மை இல்லாமல் எழுதப்பட்ட காட்சி திருமணம் நிறுத்த பட்டத்தை நிச்சயம் செய்யப்பட்ட பெண் அந்த இளைஞருக்கு அனுப்பும் வாட்ஸாப் செய்தி.அப்படிதான் ஒரு திருமணத்தை நிறுத்துவார்களா ? எத்தனை கேள்விகளை அதன் பின் அவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பது இங்கு எல்லோரும் அறிவோம். இதுதான் இந்த திரைக்கதையில் பிரச்சனை.

ஒருவேளைகுறும்படம் நீளத்தை மனதில் வைத்து அந்த சம்பவங்களின் after effects சொல்லப்படவில்லையா என்பது தெரியவில்லை.

மூன்றாவது குறும்படம் Turtle walk இந்த குறும்படத்தில் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் இருக்கவே செய்கிறது. அதாவது இரண்டு முதியவர்கள் அவர்களுக்குள் அறிமுகம் ஆகி அதன் பின் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் வயது முதிர்ந்த நிலையில் ஒரு துணையைத் தேடிக் கொள்வதே கதை.

இதில் நடித்திருக்கும் லீலா சாம்சன் மிகவும் அபாரமாக அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
இந்த கதையிலும் கதைமாந்தர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றனர். அதன்பின் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது அதன்பின் அவர்கள் ஒரு முடிவெடுக்கின்றனர். இந்தக் கதையை திரைக்கதையாக பார்க்கும் பொழுது ஒன்று நான் முதியவர்களை பற்றி தெரியாத ஒரு ஆளாக இருக்க வேண்டும் இல்லை என்றால் இது போன்ற முதியவர்களை நான் இங்கு பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களுடைய உலகம் இருந்தது.

இங்கும் முடிவுக்கு பின் என்ன நடக்கிறது என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை ஏனென்றால் இன்னும் சரிவர கதாபாத்திரங்களின் பேக் ஸ்டோரி நமக்கு தெரிவிக்கப்படவில்லை

சில்லுக்கருப்பட்டி நான்காவது குறும்படம் ஹே அம்மு திருமணமாகி 3 குழந்தைகளை பெற்றெடுத்த கணவன் மனைவியின் பற்றிய கதை. ஒட்டுமொத்த சில்லுக்கருப்பட்டியில், இந்த கதை ஆரம்பித்த உடனே என்னால் கதையுடனும் கதாபாத்திரங்களும் ஒன்றி அதை ரசிக்க முடிந்தது.

கதை ஆரம்பித்த சில நிமிடங்களில் சமுத்திரக்கனி சுனைனாவை அடுத்த அறைக்கு அழைக்கும் காட்சி ஒன்றே போதுமானது இந்த கதைக்குள் நம்மை எடுத்துச் செல்ல.

சமுத்திரக்கனி மற்றும் சுனைனாவின் நடிப்பு மிகப் பெரிய பலத்தை இந்த கதைக்கு சேர்த்திருக்கிறது. சமுத்திரக்கனி சுனைனாவை அடுத்த அறைக்கு அழைக்கும் காட்சியில் அவருடைய முக பாவனை மற்றும் வசன உச்சரிப்பு எவ்வளவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.அதன்பின் சுனைனாவின் சின்னச் சின்ன செயல்பாடுகளும், அந்த நாலு சுவற்றுக்குள் எப்படி அவளுடைய வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் திரைக்கதை வழியாக சொல்லிக் கொண்டே வந்தது சுவாரசியமாகவும் அதே சமயம் அந்த கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு சுவாரசியத்துடன் இருந்தது.

மிக முக்கியமாக ஒரு இடத்தில் சுனைனா கதாபாத்திரம் "உங்கள காலேஜ் ஃபைனல் செமஸ்டர் எக்ஸாம் ரிசல்ட்க்கு முன்னாடியே பார்த்து கல்யாணம் செஞ்சுகிட்டு வந்தேன். என்னை விட நீங்க ஆறு வயசு பெரியவர்..." அப்படின்னு சொல்லி அந்த உரையாடல் ஆரம்பிக்கும்.இங்கே இதுவெறும் வசனமாக இல்லை அவளின் மனக்குமுறலோடு சேர்த்து அவளின் back story நமக்கு தெரிய வருகிறது.

இந்த மாதிரியான பெண்களை கண்டிப்பாக நாம் கல்லூரியின் கடைசிநாட்களில் பார்த்து கடந்து இருப்போம். நாம் கல்லூரி முடியப்போகிறது என்று ஒரு விதமான கலக்கத்துடனும், அச்சத்துடனும் அலைந்து கொண்டிருக்கும்போது ஒன்று இரண்டு பெண்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப் பட்டது என்பது நமக்குசெய்தியாக வரும். அதற்கு பின் நாம் வேலை அல்லது அடுத்தடுத்த முயற்சிகளில் சென்று கொண்டிருக்கும் போது அவர்கள் நம்மிடமிருந்து துண்டிக்கப்பட்டு தனியான வாழ்க்கை ஆரம்பமாகி சில வருடங்கள் கழித்து பார்த்தால், கையில்குழந்தையுடன் ஃபேஸ்புக்கில் அல்லது வேறு ஏதோ ஒருசமூக வலைத்தளத்தில் புகைப்படமாக சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பார்கள்.அந்த காலகட்டத்தில் அவர் உடன் ஒத்த வயதுடைய ஆணையா திருமணம் செய்து இருப்பார்?

அதனால்தான் சொல்கிறேன் இந்த கதையுடன் என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது.இது மட்டும் ஒரு காரணம் அல்ல, இது போக அந்த கணவன் மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள் மிகவும் யதார்த்தமாகவும் அதே சமயம் ஒரு வித சுவாரஸ்யம் இருந்தது.ஒரு கணவன் மனைவிடம் இருந்த எதை மறைக்க முயல்வான், மனைவி அதை தெரிந்து வைத்துக் கொண்டும் அதைப்பற்றி பேசாமல் அவருடைய இயல்பான வாழ்க்கையில் கடந்து போய்க் கொண்டிருப்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

என்னுடையஅபிப்பிராயம் என்னவென்றால் இந்த ஒரு கதையை மட்டுமே இயக்குனர் முழுநீளத் திரைப்படமாக எடுத்திருந்தால் இன்னும் அவர்களது கதாபாத்திரத்துக்கு details சேர்க்கப்பட்டு, இன்னும் அந்த உளவியல் பிரச்சனைகளை பற்றி ஆழமாக சிறிது விளக்கத்துடன் சொல்லியிருக்க முடியும்.(சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தின்மீதும் அவரின் அன்றாட நிகழ்வுகள் மீதும் திரைக்கதை சென்றால் போதுமானது)

நான் மேலே சொன்னது போல் கதாபாத்திர வடிவமைப்பும் உரையாடல்களும் இந்த குறும்படத்தில் மிகவும் அழகாக சொல்லப்பட்டிருந்தது. இந்த வகையான மென் உணர்வுகளை சொல்லக்கூடிய உரையாடல்களும் இரண்டு மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு கதை சொல்லும் தன்மையும் இதற்கு முன் மிக சொற்பமான தமிழ் இயக்குனர்களுக்கு மட்டுமே கைவந்த ஒன்று.

அதை இயக்குனர் ஹலீதா ஷமீமால் செய்ய முடிந்திருக்கிறது. அவரால் இன்னும் இந்த கதையை விரிவாக சொல்லியிருக்க முடியும் என்பது என்னுடைய அனுமானம்.ஒரு இயக்குனர் ஒரு கதையை தேர்ந்தெடுக்கும் பொழுது அந்த கதைக்கான அல்லது திரைக்கதைக்கான lenth என்னவென்று என்பதையும் முடிவு செய்து கொள்ள வேண்டும். அந்த ஜட்ஜ்மெண்ட் மிகவும் முக்கியம்.

காதல் அல்லது துணையின் எதிர்பார்ப்பு போன்றவற்றை பெண்ணின் பார்வையில் சொல்லக்கூடிய திரைப்படங்கள் மிகவும் குறைவு கடந்த தசாப்தத்தில்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்களுக்கு ஒரு பெண் கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் மற்றும் அதன் உள்ளார்ந்த உளவியல் விஷயங்களை பேசுவது மிகவும் கைவருகின்றது.அதை அவர் திரைக்கதையில் கையாள இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

அப்படி மேம்படுத்திக் கொண்டு திரைக்கதையில் இன்னும் ஆழ்ந்து வேலை செய்து சுவாரசியமாகவும் அதே சமயம் நம்பகத்தன்மையுடன் கட்டமைத்தால் அவரால் நல்ல யதார்த்தமான கதைகளை, மென் உணர்வுகளை பேசக்கூடிய திரைப்படங்களை இனிவரும் காலங்களில் கண்டிப்பாக அவரால் எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

நல்ல கதைகளை அவரால் தேர்ந்தெடுக்க முடிகிறது. அதை திரைக்கதையாக கட்டமைப்பதிலும், வாழ்வியல் சார்ந்து நம்பகத்தன்மையுடன் எடுத்து செல்லும் பட்சத்தில் நிச்சயமாக சிறந்த திரைப்படத்தை உருவாக்க முடியும்.அவர் பிற எழுத்தாளர்களோடு அல்லது திரைக்கதை ஆசிரியர்களோடு ஒருங்கிணைந்து வேலைசெய்தார் (நல்ல டீம்) என்றால் அவர் ஒரு தவிர்க்கமுடியாத இயக்குனராக தமிழ் சூழலில் மாறுவார் என்று நான் அவதானிக்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள்.